கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இந்தமாதம் முன்னதாகவே வழங்கப்படும் : தமிழக அரசு
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதமாகி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, செப்.15-ஆம் தேதி மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே, தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை செலுத்தப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, வரும் 14-ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.