இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், இன்று நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ஏற்கனவே, இலங்கை கைது செய்த மீனவர்கள் 37 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நேற்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 37 தமிழக மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.