“எச்.ராஜாவை கைது செய்யுங்கள்” தலைவர்கள் கண்டனம்..!!
நீதிமன்றம் குறித்தும், தமிழக காவல்துறை குறித்தும் மிக கொச்சையாக விமர்சித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அந்த வீடியோவில் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசியிருக்கிறார்.
எச்.ராஜாவின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், அக்கட்சியின் மாநில தலைவர் இரா.முத்தரசன் எச்.ராஜாவின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது எனவும், காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தை தரம் தாழ்ந்து பேசியுள்ள எச்.ராஜாவை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் இன்று ராமசாமி படையாச்சியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு பேட்டியளித்தபோது நீதிமன்றம் குறித்து பேசிய எச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
DINASUVADU