ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!
இன்று காலை சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டும் நபராக சீசிங் ராஜா இருந்ததாகவும், அந்த வழக்கில் தான் இவர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
இப்படியான சூழலில், சீசிங் ராஜா என்கவுண்டரின் உண்மை நிலவரம் என்ன? வழக்கின் பின்னணி ஆகியவை பற்றி சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
அவர் கூறுகையில், ” தனிப்படை போலீசார் வேறு ஒரு வழக்கில் குற்றவாளியை தேடி ஆந்திரா சென்று இருந்தனர். அப்போது கடப்பா அருகே ராஜம்பேட் பகுதியில் வேளச்சேரி சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் இருப்பிடம் பற்றி அறிந்துள்ளனர். உடனடியாக வேளச்சேரி போலீசார் அளித்த உத்தரவின்படி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டார். இங்கு பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இடத்தை சீசிங் ராஜா காண்பிப்பதற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை தருவது போல பாவனை செய்து துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக காவல்துரையினரின் வாகனம் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன.
அப்போது வேளச்சேரி ஆய்வாளர் தனது துப்பாக்கியால் 2 முறை சுட்டதில் சீசிங் ராஜா உடலில் குண்டுகள் பாய்ந்தன. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சீசிங் ராஜா மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேடப்படும் குற்றவாளியாக உள்ள சீசிங் ராஜாவுக்கு இதுவரை 10 முறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை. வேளச்சேரியில் ஒருவரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்ததாக வந்த புகாரின் பெயரில் விசாரணை நடைபெற்றது.
இந்த சம்பவம் கடந்த மாதம் ஆகஸ்ட்டில் நடைபெற்றுள்ளது. அந்த வழக்கில் தான் சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் துப்பாக்கி வைதிருந்த வழக்கு என்பதால் இவரை தீவிரமாக தேட ஆரம்பித்தோம். அதனால் இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தமில்லை.
இது தற்காப்புக்காக நடந்த சம்பவம் . துப்பாக்கி எடுத்து சுட்டதும் எங்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. அதனால், எங்கள் தரப்பு என்கவுண்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னையில் துப்பாக்கி கலாச்சரம் இல்லை. தேடபப்டும் சில குற்றவாளிகள் கைகளில் துப்பாக்கிகள் உள்ளன. என்கவுண்டர் என்பது தற்காப்புக்காக நடந்த ஒரு சம்பவம். என்கவுண்டர் நடந்த இடத்தில முழு இருட்டு, அப்போது புதரில் புதைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சீசிங் ராஜா சுட்டுள்ளார். அதனால் நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம்.” என சீசிங் ராஜா என்கவுண்டர் பற்றி சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார்.