ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : விசாரணை வலையில் நெல்சன் மனைவி?
சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் வெட்டிப்படுக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் , இந்த கொலை தொடர்பான வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஸ் என முன்னாள் அரசியல் பிரமுகர்களும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை 23 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவரை வரும் செப்டம்பர்- 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், சிறையில் இருந்துகொண்டே கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக கூறப்படும் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதனையடுத்து, இந்த கொலையில் மூல காரணமாக இருந்ததாக கூறப்படும் சம்போ செந்தில் இன்னும் கைதாகவில்லை.
காவல்துறையினர் பல முறை அவரை கைது செய்ய முயற்சி செய்து அவர் தப்பித்து வருவதாக கூறப்டுகிறது. அவரை கைது செய்ய 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் தாய்லாந்திற்கு தப்பித்து ஓடியதாக கூறப்படும் நிலையில், அவருடைய கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரணை செய்யவும் காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவரும் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது .
நெல்சன் மனைவியிடம் விசாரணை?
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் தொலைபேசியில் நெல்சன் மனைவி மோனிஷா பேசியுள்ளதாகவும், இதன் காரணமாக மொட்டை கிருஷ்ணனுக்கு அவர் அடைக்கலம் கொடுத்துள்ளாரோ? என்ற சந்தேககோணத்தில் காவல்துறையினர் மோனிஷாவிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நிலையில் அது குறித்தான விசாரணையை அவரிடம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், அதைபோல், அவரை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.