நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!
நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் டிசம்பர் 20 அன்று அரங்கேறியது.
ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சமீபத்தில் நடந்த கொலைச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பாதுகாப்பு, பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பழிவாங்கும் எச்சரிக்கைகள் வழங்கப்படும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். மேலே குறிப்பிட்டபடி, நீதிமன்றங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்களுக்கு வழக்குகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.