ஜெயலலிதாவுடன் ஒப்பீடு.! பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை எரித்த அதிமுகவினர்.!
ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதால் அரியலூர் அதிமுக நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை எரித்தனர்.
பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மைக்காலமாக அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாகா பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘ நானும் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் தான். அவர் அளவுக்கு ஆளுமை இல்லை என்றாலும், மாநில கட்சி தலைவர் என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பு :
இதற்கு அதிமுக மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகின. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயகுமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கருத்துக்களை பேசியிருந்தனர்.
அண்ணாமலை புகைப்படம் எரிப்பு :
இந்நிலையில், அரியலூரில் அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்ணாமலை உருவ புகைப்படத்தை எரித்தனர். இதனை தகவலறிந்து உடனடியாக காவல்துறையினர் தடுத்து அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ படத்தை அதிமுகவினர் எரித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இபிஎஸ் புகைப்படம் எரிப்பு :
முன்னதாக கோவில்பட்டி பாஜக நிர்வாகிகள், பாஜகவினர் அதிமுகவில் இணைவதை எதிர்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்து.