போலீசாருடன் வாக்குவாதம்- பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி…!
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்ட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தேவையின்றி காரில் வந்த பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் மகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அபராதம் விதித்ததற்காக போலீஸாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இதைதொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரது மகள் பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்தி ஏற்கனவே முன் ஜாமீன் கோரி இருந்தனர். இந்த மனுவை விசாரித்தபோது பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததால் முன்ஜாமீன் தரக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவரது மகள் பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.