அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!
விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை இந்த இடத்தில் வரக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தவெக கட்சித் தலைவர் விஜய் தற்போது பரந்தூர் வருகை தந்தார்.
மேல்பொடவூர் கிராமத்தில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், அதில் பேசிய த.வெ.க தலைவர் “பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். சமீபத்தில், மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிராக தமிழக அரசு தனி தீர்மானம் கொண்டு வந்ததை நான் வரவேற்கிறேன். ஆனால், அதனை அதே நிலைப்பாட்டை தானே பறந்தூர் பிரச்சனைக்கும் எடுத்திருக்க வேண்டும்?
தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை? அது வேற மக்கள்..இது வேற மக்களா? எப்படி அந்த பகுதி மக்கள் நம்ம மக்களோ அதே போல் பறந்தூர் பகுதி மக்களும் நம்ம மக்கள்.
இந்த விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் இந்த முடிவில் நாங்கள் உறுதியாக நிற்போம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் நான் சொல்வது என்னவென்றால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன் இதை நான் சொல்லவில்லை என்றால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என கதையை கட்டி விடுவார்கள்.
விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டு தான் எனது அரசியல் பயணம் தொடங்க வேண்டும் என நினைத்தேன், அதற்கான முன்னெடுப்பு தான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன் . உங்களோடு நாங்கள் தொடர்ந்து இருப்போம் என்பதை சொல்ல தான் வந்தேன். தொடர்ந்து இருப்பேன் ” எனவும் த.வெ.க.தலைவர் விஜய் பேசினார்.