மாணவர்களே ரெடியா? 10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் இன்று முதல் வரும் 8-ஆம் தேதி வரை திருத்தும் பணி நடைபெறுகிறது. இதனிடையே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினமும் முடிவடைந்தது. பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் துவங்குகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது.
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் ஏ.கே.டி, ஆக்சாலிஸ் என 2 மையங்கள், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் மவுண்ட்பார்க், உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 மையங்கள் என மொத்தம் 4 மையங்களில் விடைத்தாள் திருத்துவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர், 1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம் பாட விடைத்தாள்கள் காலை 15, மதியம் 15 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும். அதேபோல், இயற்பியல், வேதியியல், கணிதம் பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 7-ல் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.