செப்., 14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறதா.? அரசு விளக்கம்
பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று வெளியான செய்தி போலியானது என்று அரசு விளக்கமளித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .மத்திய அரசு சமீபத்தில் பல தளர்வுகளை அறிவித்த பின்னரும், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகள் மூடப்படிருக்கும் என்று அறிவித்தனர்.
மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் அவர்களும் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த இக்கட்டான சூழலில் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் நிலையில் மக்கள் செய்தித்தொடர்பு மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை போன்ற செய்தி குறிப்பு ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அதில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததோடு, அந்த செய்தி குறிப்பு போலியானது என்றும், மக்கள் செய்தித்தொடர்பு அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.