மக்களே வாரங்களா..? இல்லை வர வைக்கிறீகளா? – திமுகவை விமர்சித்த சீமான்!
சிறப்பான ஆட்சி என்று மக்கள் தான் சொல்ல வேண்டும், நீங்கள் சொல்லக் கூடாது என சீமான் திமுகவை சாடி பேசி இருக்கிறார்.
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தாக்கி பேசி இருந்தார்.
அதில், குறிப்பாக, “அப்பா மகனைப் புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார். இது தான் திமுக ஆட்சியின் வேடிக்கை” எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்து உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகள் வைக்கப்பட்டது. திருச்சியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “போகிற இடம் எல்லாம் திராவிட மாடல் ஆட்சி சூப்பர்..சூப்பர் என்று அவர்களே சொல்லுகிறார்கள்.
என்னுடன் ஒரு முறை வாருங்கள், எத்தனை மக்கள் மனுவுடன் கண்ணீரோடும், கதறலோடும், கவலையோடும் கதறுவதை ஒரு முறை கேளுங்கள். ஆட்சியாளர் ஒருவர் தான் ஆட்சி சிறப்பான ஆட்சி என்று கூறுகிறார்கள் என்றால் அது கொடுமையான ஆட்சி என்று அர்த்தம். சிறப்பான ஆட்சி என்று மக்கள் சொல்ல வேண்டும்.
நாடும், மக்களும், ஏடும் சொல்ல வேண்டும். ஏடு போற்றும்..வாடகை வாய்கள் பேசும். அவர்கள் ஊடகம் அவர்களைப் பற்றிப் போற்றும், மக்கள் தூற்றுகிறார்கள். நீங்கள் காசு கொடுத்துக் கூட்டிவந்து மக்களை இருபுறமும் நிற்க வைக்கிறீர்கள்.
அவர்களா வருகிறார்களா? இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என மக்களே வருகிறார்களா? உங்களைப் பார்க்க மக்களே வாரங்களா? இல்லை வர வைக்கிறீர்களா?”, எனச் சீமான் பேசி இருந்தார்.