அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், அமைச்சரின் அறிவிப்பு பேரதிர்ச்சி கொடுப்பதாகவும், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்
இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில், “500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அரசுப்பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது.
கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.