அரக்கோணம் மக்களவைத் தொகுதி… ஓர் பார்வை.!
Arakkonam : தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் 7-வது இடத்தில் இருப்பது அரக்கோணம். இந்த தொகுதி 1977ல் உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை 12 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அரக்கோணம் மக்களவை தொகுதி ஒரு காலத்தில் ஆங்கிலேர்களின் ராணுவ கோட்டையாக இருந்ததாகவும், தற்போது உலகளாவிய சுற்றுசூழல் மதிப்பீடுகளில் இந்த தொகுதி பின் தங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது.
2008ம் ஆண்டு மறுசீராய்வு:
எனவே, அரக்கோணம் மக்களவை தொகுதி கடந்த 2008ல் மறுசீரமைக்கப்பட்ட பின், தற்போது திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதற்கு முன்பு, பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் செய்யார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை அரக்கோணம் மக்களவை தொகுதி கொண்டிருந்தது.
அரக்கோணம் எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அதிகம் வெப்பநிலை பதிவாகும் இடம்தான் அரக்கோணம். இருந்தாலும், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி கோயில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வந்த இடங்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.
இதுபோன்று, வேளாண் மற்றும் தொழில் துறையை இந்த அரக்கோணம் தொகுதி பின்னணியாக கொண்டுள்ளது. அதன்படி, தோல் தொழில், விசைத்தறி, எம்ஆர்எப், டிவிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் உள்ளன. குறிப்பாக சர்வதேச அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் அரக்கோணம் தொகுதி முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த அரக்கோணம் மக்களவை தொகுதியில் வன்னியர் மற்றும் முதலியார் சமூகத்தினர் அதிகளவு வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பட்டியலினத்தவர்கள், நாயுடு சமூகத்தினர் இருந்து வருகின்றனர்.
கள நிலவரம்:
இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள அரக்கோணம் மக்களவை தொகுதியில் 1977ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள 12 தேர்தல்களில் அதிகபட்சம் காங்கிரஸ் கட்சி 5 முறை வெற்றிப் பெற்றுள்ளது. இதையடுத்து திமுக 3, அதிமுக 2, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒன்று வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, 1977ல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஓ.வி அழகேசன் வெற்றி பெற்றிருந்தார். கடைசியாக 2019ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றுள்ளார்.
கணிப்பு:
அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக 4, அதிமுக 1, காங்கிரஸ் 1 என இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், துரைமுருகன், மற்றும் காந்தி என இரு அமைச்சர்களை கொண்ட தொகுதியாக அரக்கோணம் உள்ளது. இதனால் இம்முறை திமுக அல்லது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல மக்கள் எண்ணங்கள் வரும் தேர்தலில் தான் வெளிப்படும்.
2019 தேர்தல் முடிவுகள்:
இந்த தொகுதியில் கடைசியாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 6,72,190 பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.
இதில், திமுக வேட்பளர் எஸ். ஜெகத்ரட்சகன் 6,72,190 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ. கே. மூர்த்தி 3,43,234 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 328,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:
தொகுதிகள் | வெற்றி | தோல்வி |
திருத்தணி | S.சந்திரன் (திமுக) |
G.ஹரி (அதிமுக)
|
அரக்கோணம் | எஸ்.ரவி (அதிமுக) 2011-தற்போது வரை |
கௌதம சன்னா (விசிக )
|
சோழிங்கநல்லூர் | A.N.முனிரத்னம் (காங்கிரஸ்) |
A.N.கிருஷ்ணன் (பாமக)
|
காட்பாடி | துரைமுருகன் (திமுக ) 1996 – தற்போது வரை |
வி.ராமு (அதிமுக)
|
ராணிப்பேட்டை | R.காந்தி (திமுக) |
S.M.சுகுமார் (அதிமுக )
|
ஆற்காடு | J.L.ஈஸ்வரப்பன் (திமுக) |
K.L.இளவழகன் (பாமக)
|
வாக்காளர் எண்ணிக்கை:
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர்கள் | மொத்தம் |
7,56,194 | 7,97,632 | 163 | 15,53,989 |