நாதுராமின் மனைவி மஞ்சு வாக்கு மூலம் !

Default Image

ஆய்வாளர் முனிசேகர் தனது துப்பாக்கியால் சுட்டதால் தான் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்ததாக, நாதுராமின் மனைவி மஞ்சுவிடம் நடத்திய விசாரணையின் போது, தெரியவந்துள்ளதாக ராஜஸ்தான் போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் தடயவியல் ஆய்வின் அறிக்கை வந்த பிறகே ஆய்வாளர் முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் நகைக்கடையின் மேற்கூரையில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கடந்த 13 ஆம் தேதி கொள்ளையர்களுடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இது தொடர்பாக ஆய்வாளர் பெரியபாண்டியன் உடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் தான், ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்ததாக ஜெயித்தரன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து கொள்ளையன் நாதுராம், அவரது மனைவி மஞ்சு, அவரது கூட்டாளி தீபு ராம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் திடுக்கிடும் தகவல் ஒன்றை கடந்த 16 ஆம் தேதி அறிக்கையாக வெளியிட்டார்.

அதில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மேற்கொண்ட தடயவியல் சோதனையில், ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலில் பாய்ந்த குண்டு, ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்து வெளியேறியது எனவும், துப்பாக்கியில் ஆய்வாளர் முனிசேகருடைய கைரேகை மட்டுமே பதிவாகிவாகியிருப்பதையும் குறிப்பிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையர்களிடமிருந்து ஆய்வாளர் பெரியபாண்டியனை காப்பற்ற நினைத்து ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை நோக்கி சுடும்போது தவறுதலாக ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்து இருக்ககூடும் என்றும்  காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 304-ஏ பிரிவின் கீழ் ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியது.

இந்த வழக்கு தொடர்பாக நாதுராமின் கூட்டாளி தேஜாராம், அவரது மனைவி பித்யா, அவரது மகள் சுகுனா ஆகிய 3 பேரை கைது கடந்த 15 ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து மால்வாஸ் என்னும் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவையும் கடந்த  17 ஆம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மஞ்சுவிடம், ராஜஸ்தான் போலிசார் நடத்திய விசாரணையில், தங்களை பிடிக்க வந்த போலீசாருடன் நிகழ்ந்த மோதலின் போது,  ஆய்வாளர் முனிசேகர் சுட்டதில் தான் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்துள்ளதை உறுதிபட தெரிவித்துள்ளார். தனது கணவர் நாதுராம் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து விட்டு தனக்கு செல்போனில் மெசேஜ் அனுப்புவார் எனவும், பின்னர் விமானம் மூலம் அந்த இடத்திற்கு சென்று கொள்ளையடித்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்து விடுவதாகவும் மஞ்சு தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் அவற்றை நாதூராமின் கூட்டாளிகள் நகைகளை பெற்றுக் கொண்டு பணமாக்கி விடுவர் எனவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவிடம் விசாரணை குறித்து  நமது செய்தியாளர் தொலைபேசியில் கேட்டபோது, முதற்கட்ட விசாரணையில் ஆய்வாளர் முனிசேகர் சுடப்பட்டதால்தான் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரழந்தது தெரியவந்துள்ளதாகவும், ஆனால் தடயவியல் ஆய்வின் முழு அறிக்கை வந்தவுடன் தான் இந்த வழக்கில் ஒரு முடிவுக்கு வர இயலும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் குற்றம் உறுதியானால் ஆய்வாளர் முனிசேகரிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பி தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்