தமிழகத்தில் ஏப்ரல் 19ல் பொது விடுமுறை!
Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை.
நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பின், ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த சூழல் தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலினை, வாபஸ் பெறுவது என அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணியில் தலைமை மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை அளித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இதனிடையே, மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுந்திருந்தது.
அதனடிப்படையில், தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 19ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.