137 கோவில்களில் திருப்பணி தொடங்க ஒப்புதல்..! இந்து சமய அறநிலையத்துறை
தமிழகம் முழுவதும் 137 கோவில்களில் திருப்பணி தொடங்க இந்து சமய அறநிலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களின் பழைமையை மாறாமல் வைக்க கோவில்களை புதுப்பிக்கும் திருப்பணிகளை தொடங்க ஒப்புதல் வழங்கிட மாநில அளவிலான 51-வது வல்லுநர்கள் குழுக்கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயராம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவில், சைதாப்பேட்டையில் உள்ள தேவி பொன்னியம்மாள் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் உள்ள தேர்வீதி விநாயகர் கோவில் உட்பட 137 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வல்லுநர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோவில் திருப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.