மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, சிலர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டுமே பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என். நேரு, தேனிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கோவை வருவாய் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியும், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி, இயற்கை சீற்ற நேரத்தில் அவசரகால பணிகளை மேற்கொள்ளவும், நலத்திட்டங்களை கண்காணிக்கவும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.