ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…
தவெக கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்களை ஜனவரி மாத இறுதிக்குள் நியமிக்கும்படி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக தலைவர் விஜய் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கட்சியை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், விஜய் தனது கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இன்று கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில் விஜய் உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, நிர்வாகிகள் நியமிக்க இவ்ளோ தாமதமாக்கப்படுவது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டு, மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விஜய் நடித்து வரும் கடைசி படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்தில் நிறைவடையும் என்பதால், மார்ச் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.