இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விநியோகம்
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஆன்லைன் மூலம் விநியோகம்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
“தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958 இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு வெளியாகிறது.அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்”,என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம்,தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி, திருப்பூர்,நாமக்கல், திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிரதமர் அவர்கள், விருதுநகரில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.