கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு – குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்…!
கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் 1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தை மரக்காணத்தில் தமிழக முதலமைச்சர் 10ம் தேதி துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.