வேலூரில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை…!
வேலூரிலுள்ள ஆவின் பால் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், பொது மேலாளர் காரில் இருந்த பணம் உட்பட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் – திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்த ஆவின் தலைமையகம் உள்ளது. இதில் தலைமை அலுவலராக பணியாற்றுபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆவின் நிறுவனத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் பதினோரு பேர் வேலை செய்து வரும் நிலையில், வேலை செய்பவர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலுவை தொகைக்கான பணத்தில் அலுவலக பொது மேலாளராக பணியாற்றும் முரளி பிரசாத், தனக்கு 35 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என ஊழியர்களிடம் சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகால நிலுவைத் தொகையில் முதல்கட்டமாக 44 லட்சம் ரூபாய் 11 பேரின் வங்கிக் கணக்குக்கும் நேற்று முன்தினம் சென்றடைந்த நிலையில், இதில் தனக்கான கமிஷன் பணத்தை அந்த 11 பேரிடம் இருந்து இரண்டு நாட்களில் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சோதனையில் அலுவலக பொது மேலாளராக பணியாற்றி வரக்கூடிய கே எஸ் முரளி பிரசாத் என்பவரது காரில் இருந்து 11 லட்சம் உட்பட 14 லட்சத்து 85 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.