விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி – டி.ஆர்.பாலு

Default Image
“விவசாயிகள் விரோத அதிமுக அரசு என்பதும், விவசாய விரோத முதல்வராக  பழனிசாமி இருப்பதும் – பாஜக அரசின் வேளாண் மசோதாக்களுக்கு அளித்த ஆதரவின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது”  என்று திமுகவின் பொருளாளரும், எம்.பி.-யுமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மறுதினம் – திராவிட முன்னேற்றக் கழகமும் – கூட்டணிக் கட்சிகளும் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட அறிவிப்பு அதிமுக அரசைக் கதி கலங்க வைத்துள்ளது. ஊழலில் இருந்து தப்பிக்க – சி.பி.ஐ. ரெய்டில் சிக்காமலிருக்க- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்களை ஆதரித்து வாக்களித்து விட்டு- இப்போது திருவிழா கூட்டத்தில் காணாமல் போனவர் முழிப்பது போல் அதிமுக அரசு திருதிருவென முழித்து நிற்கிறது.
இந்தச் சூழலில்- நாட்டில் உள்ள விவசாயிகளும் – தமிழக விவசாயிகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எண்ணிக் கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மை தருவதே தவிர அவற்றால் எவ்விதப் பாதிப்பும் இல்லை” என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு நேற்றைய தினம் தனது துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடியுடன் அமர்ந்து அளித்துள்ள பேட்டிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆதரவளிக்கச் சொன்ன விவசாயிகள் விரோத மசோதாவை ஆதரித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம்“டெல்டா” மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சருக்கும், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் ஏற்பட்டிருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.
“பண்ணை ஒப்பந்தம்” என்ற அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வையே சூறையாட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்டங்களை “விவசாயிகளின் வாழ்விற்கு உறுதியளிக்கும் சட்டம்” என்கிறார் வேளாண்துறை அமைச்சர். இந்தச் சட்டங்கள் “ஆன்லைன் வர்த்தகத்தைத் திணிக்கிறது” “பண்ணை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை ஆக்குகிறது” “நெல்லுக்குக் குறைந்தபட்ச விலை கிடையாது” “குறைந்த பட்ச விலை என்ற வார்த்தையே இந்தச் சட்டங்களில் கிடையாது” “அரசு நெல்கொள்முதல் நிலையங்கள், வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகள், ரேசன் கடைகள் எல்லாம் மூடப்படும் அபாயம்” “பொது விநியோகத் திட்டம் ரத்தாகும் ஆபத்து” “சில்லறை வணிகமும்- வணிகர்களும் பாதிக்கப்படுவார்கள்” என்ற காரணங்களை எல்லாம் மறைத்து நேற்றைய தினம் ஒரு பேட்டியைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திரு. துரைக்கண்ணு என்றால் – தன் பதவி தப்பிக்க – தன் ஊழலை மறைக்க விவசாயிகளை “பலிபீடத்தில்” ஏற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
இவை மட்டுமல்ல – இந்தச் சட்டங்கள் “விவசாயத் தொழிலாளர்களைப் பாதிக்கிறது” “உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைக்கப் பயன்படுகிறது” “ஏழை, மத்தியதர வர்க்கத்தை அடியோடு பாதித்து” மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக இருக்கிறது. ஆகவே “நானும் விவசாயி” என்று சொல்லிக் கொண்டு விவசாயத்தை – குறிப்பாக டெல்டா விவசாயத்தை அழிக்க மத்திய பா.ஜ.க. அரசுடன் இணைந்து கூட்டாகச் செயல்படும் முதலமைச்சர் திரு பழனிசாமிக்குத் துணை போயிருக்கிறார் திரு துரைக்கண்ணு.
இந்தத் துரோகத்தை டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமல்ல – தமிழகத்தில் உள்ள எந்த விவசாயியும் மன்னிக்க மாட்டார்கள்.இதே பத்திரிகையாளர் பேட்டியில் அமைச்சருடன் கலந்து கொண்ட தமிழக அரசின் வேளாண்துறை முதன்மை செயலாளர் திரு ககன்தீப் சிங் பேடி, “ஆதார விலையை விடக் குறைவாக விலையை வழங்கும் நிறுவனத்துக்கு 150 சதவீதம் அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வாய்ப்பு உள்ளது” என்று கூறி- முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அதிமுக என்ற தனிப்பட்ட கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரித்த வேளாண் மசோதாக்களுக்கு ஓர் அரசு செயலாளர் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது புரியவில்லை. திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள் குறிப்பிடும் வேளாண் சட்டத்தில் எந்த இடத்திலும் “குறைந்தபட்ச ஆதார விலை” பற்றிய வார்த்தையே இல்லை. அப்படி “குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவாகக் கொடுத்தால் 150 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்” என்றும் அந்தச் சட்டத்தில் மட்டுமல்ல – தமிழக அரசு இந்தியாவிலேயே முதலில் கொண்டு வந்ததாகக் கூறும் சட்டத்திலும் இல்லை. அதிமுக அரசின் விவசாயிகள் விரோதப் போக்கினை ஆதரிக்க – சட்டத்தில் இல்லாத ஒரு விளக்கத்தை – அதுவும் வேளாண்துறைச் செயலாளரே கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே அமைச்சரும், அதிகாரிகளும் சேர்ந்து என்னதான் பிரச்சாரம் செய்தாலும் – அதிமுக அரசு விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் உறுதியாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகள் விரோத முதலமைச்சராகத் திரு. பழனிசாமி இருக்கிறார் என்பதும் நூற்றுக்கு இரு நூறு சதவீதம் நிரூபணம் ஆகி விட்டது. ஆகவே 28 ஆம் தேதி நடைபெற விருக்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம்- இந்தச் சட்டங்களால் எத்தகைய கொந்தளிப்பிற்கு விவசாயிகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும். அப்போதாவது அதிமுக அரசு விழித்துக் கொண்டு – இந்த விவசாயி விரோத சட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Udhayanithi Stalin
Edappadi Palanisamy
Irfan - Youtuber
Annamalai (12) (1)
Doctors Strike
TN Govt Hospital Kalaignar