அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம்.! மேலும் ஒரு வழக்குப்பதிவு.!
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி போலிசாரால் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிககளின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறு சிறு குற்றங்களுக்காக சந்தேகிக்கப்பட்டு வந்தவர்களை கூட சித்தரவதை செய்ததாக புகார்கள் எழுந்து வந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து, எஸ்.பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் தொடர் புகார்களை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பிறகு இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் சென்றது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களில் உண்மை நிலையினை அறிய அமுதா ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் என்பவர் ஏற்கனவே அளித்த புகார் உட்பட பல்வேறு புகார்களை கொண்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், கள்ளிடைக்குறிச்சி காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அது போல, பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து சென்று, எந்த இடத்தில் எவ்வாறு அழைத்து பற்கள் பிடுங்கப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. OCI (Organized Crime Investigation) எனும் உட்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கர் எனும் காவல்துறை அதிகாரியின் கீழ் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் கீழ், கணேசன், அருண்குமார், சந்தேஷ் , ராசு உள்ளிட்ட 7 பேர் வரும் 5 ஆம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.