வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது – முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றனார். முதலமைச்சர் உரையில், இன்று காலநிலை மாற்றம் தான் உலகின் பெரிய பிரச்சனையாக உள்ளது. 1969-ம் ஆண்டிலேயே காலநிலை மாற்றம் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் பேசி இருக்கிறார். கலைஞரின் ஆட்சி, உழவர்கள் நலன் நாடும் ஆட்சியாக இருந்தது என எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருந்தார்.
எனவே, மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும் என அறிவித்தார்.
இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் சமீபத்தில் காலமானார். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி, வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்றும் அவர் பெயரில் மாணவர்களுக்கு விருது வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.