நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்திருப்பது கவலையளிக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வுக்கான தேதி அறிவித்திருப்பது கவலையளிப்பதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மொபைல் போன் இல்லாத காரணத்தால், மாணவர்கள் பலர் ஆன்லைன் வகுப்புகளை தொடர இயலாத நிலை காணப்படுத்தாக வும், இதற்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு கூடாது என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. சட்டப்போராட்டத்தின் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிப்போம் என்றும், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், நீட் தேர்வுக்கான தேதி அறிவித்திருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.