விசைத்தறியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்த கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு..!
7 ஆண்டுகளாக கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவேயில்லை வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு வழிகளைத் தேடியும் இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை இழந்து வாடியும் விசைத்தறியாளர்கள் தவித்துக்கொண்டிருக்கும்,
நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 24.11.2021 ந்தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில அமைச்சர் பெருமக்களாலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளாலும் அறிவிக்கப்பட்ட பல்லடம் இரகத்திற்கு 20% சோமனூர் இரகத்திற்கு 23% கூலி உயர்வை அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து,
இரண்டு மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் விசைத்தறி தொழிலையும் விசைத்தறியாளர்களையும் விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற ஒருஞ்கிணைந்து போராடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.