பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்போது? வெளியானது அறிவிப்பு…
2025 ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: புத்தாண்டு 2025 நாளை பிறக்கவுள்ளது, வருகின்ற ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், இதன் மூலம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது இதற்காக அரசு ரூபாய் 249.76 கோடி செலவு செய்கிறது. அதன்படி, 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படுகிறது.
மேலும், பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வரும் 3ஆம் தேதி முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் ஜனவரி 9ஆம் தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.