சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது.
இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மழைநீர் வடியாத சில பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின்
இப்பணியில் மத்திய, மாநில பேரிடர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த புயல் மற்றும் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுபோன்று, மழை பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.