குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் நேற்று உயிரிழந்துள்ளனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களான முருகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், உதயகுமார் மற்றும் விஜய் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அறிவித்துள்ளார்.