ராகுல் காந்தி முதல் சீமான் வரையில்., அன்னபூர்ணா சீனிவாசனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.!

அன்னபூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Rahul Gandhi - Jayakumar - K Balakrishnan

சென்னை : கோவையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன், வெவ்வேறு உணவு பொருட்களின் மீது வெவ்வேறு ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது எனக்கூறி அதனை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ,  இன்று காலையில் கோவை நட்சத்திர ஹோட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் , அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியானது.

தனது தொழிலில் தான் சந்திக்கும் பிரச்சனையை மத்திய அமைச்சரிடம் ஒரு ஹோட்டல் நடத்துபவராக சீனிவாசன் கூறிய கருத்துக்கள் சரியே என்றும், இன்று அவர் மன்னிப்பு கேட்டதும், அந்த வீடியோ இணையத்தில் வெளியானது குறித்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி :

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில், ” கோவையில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், தங்கள் தொழிலில் ஜிஎஸ்டி வரி முறை பற்றி முன்வைத்த கோரிக்கையானது  ஆணவத்துடன், அவமரியாதையுடன் கையாளப்பட்டுள்ளது. ஆனால்,  கோடீஸ்வரர்களுக்கு மோடி ஜி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார். ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். ” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெயக்குமார் :

” மத்திய அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சனைகளை கோரிக்கையாக அவர் முன்வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்.” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :

காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் , ”  நாளை (14.09.2024) சனிக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ் புரத்தில் அன்னபூர்ணா ஹோட்டல் எதிரே சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என பதிவிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ” ஹோட்டல் உரிமையாளர் அன்னபூர்ணா சீனிவாசன் கேள்வி கேட்ட வீடியோ வெளியானதும் பலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பாஜகவுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சரிடம் கோரிக்கை வைப்பது என்பது வழக்கமான ஒன்றுதானே? கேள்வி கேட்பவரை மிரட்டுவது, வாயை அடைப்பது, மன்னிப்பு கேட்கச் செய்வது என்பது எதேச்சதிகாரம். மேலிருந்து அடிமட்டம் வரை தொடரும் பாஜகவினரின் ஆணவம் வன்மையான கண்டிக்கத்தக்கது.” என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார் .

விசிக எம்.பி ரவிக்குமார் :

“அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜக காரர்கள் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது”  எனக் விசிக எம்.பி ரவிக்குமார்  கூறியுள்ளார்.

சீமான் :

“ஜி.எஸ்.டியால் வர்த்தகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தாலும் அவர் கேள்வியில் இருக்கும் உண்மையை, யாராலும் மறைக்க முடியாது.” என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்