திமுகவினர் பற்றிய அவதூறு வழக்கு.! இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் அண்ணாமலை.!
திமுகவினர் பற்றிய அவதூறு பரப்பியதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று அண்ணாமலை ஆஜராக உள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவினர் சொத்துப்பட்டியல் என ஒரு விடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் திமுகவினர் பற்றிய தவறான தகவல்களும், அவதூறு பரப்பும் கருத்துக்கள் இருப்பதாகவும் கூறி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார்.
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, பாஜக சார்பாக DMKfiles இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளேன்.
ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டு காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள். நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்குத் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.