6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தான்னை தானே 6 முறை சாட்டையால் அடித்து திமுக அரசு அகல வேண்டும் என போராட்டம் நடத்தினார்.
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்து இருந்தார்.
அதேபோல, இன்று காலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேல் சட்டையின்றி, பச்சை நிற வேட்டியுடன் வந்து தேங்காய் நாரால் ஆன சட்டையில் தன்னை தானே 6 முறை அடித்துக்கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
உடலை வருத்தி சாட்டையடி போராட்டம் நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவர் நாட்டிற்கு வகுத்து தந்த பொருளாதார கொள்கைக்கு நன்றி என்றும் தெரிவித்தார் .
இதனைத்தொடர்ந்து போராட்டம் குறித்து பேசிய அண்ணாமலை, ” நாங்கள் இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் வரும்காலத்தில் இன்னும் தீவிரமடையும். இது ஒரு தனிமனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீதான கோவத்தை கட்டுவதற்கான போராட்டமில்லை. கண்முன்னால் அடுத்து தலைமுறை அழிந்து வருகிறது. பொருளாதாரம், கல்வியில் தமிழ்நாடு பின்தங்கி வருகிறது.
பெண்கள் மீதும், தயார் மீதும், குழந்தைகள் மீதும் தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 6 சாட்டையடிகள் ஏன் என்றால், முருகனிடம் முறையிடுகிறோம். விரதம் இருக்க போகிறோம். ஆண்டவனிடம் வேண்ட போகிறோம். இந்த ஆட்சி அகல வேண்டும். அதுவரையில் செருப்பு போட மாட்டேன்.
காவல்துறையில் இருந்தபோது, இதே போல 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். அந்த குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டேன். அப்போது அந்த மாணவியின் பெற்றோர், குற்றவாளியை பிடித்துவிட்டீர்கள், எனது குழந்தையை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள் என கேட்டார்கள். அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம், இப்போது என்னை பாஜகவுடன் பயணம் செய்ய வைத்துள்ளது. தற்போதும் அதே போல நடக்கிறது. இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
சாட்டையால் அடிப்பது, காவடி எடுப்பது என உடலை வருத்துவது நமது மரபு, தற்போதுள்ள திமுக ஆட்சியில் எதுவும் பேச முடியவில்லை. அகிம்சையாக போராட முடியவில்லை. ” என சாட்டையடி போராட்டம் குறித்து அண்ணாமலை பேசினார்.