“காமராஜர், எம்.ஜி.ஆர் சொன்னால் ஓகே.! கூட்டுகளவாணிகள் சொன்னால்?” அண்ணாமலை கடும் தாக்கு!
கல்விக்கொள்கை பற்றி காமராஜர், எம்ஜிஆர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், கூட்டுகளவாணிகள் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என திருச்சி கூட்டத்தில் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார்.

திருச்சி : நேற்று திருச்சியில் பாஜக சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தமிழக பட்ஜெட் மீதான விமர்சனம், தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி விமர்சனம் என ஆவேசமாக பேசினார்.
அப்போது புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி தனது கருத்துக்களை குறிப்பிட்டார். இதுவரை 18 நாளில் மும்மொழிக்கு ஆதரவாக 27 லட்சம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மே இறுதிக்குள் 1 கோடி கையெழுத்து வாங்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், ” 1968-ல் முதல் முறையாக தேசிய கல்வி கொள்கை வந்தது. அடுத்து 1986-ல் 2ஆம் தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பின்னர் 1992-ல் திருத்தப்பட்ட 2ஆம் கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. இதுவரை சுதந்திரத்திற்கு பிறகு 2 தேசிய கல்வி கொள்கை மட்டுமே வந்துளளது.
இதனால், பிரதமர் மோடி உத்தரவின் கீழ் புதிய தேசிய கல்வி கொண்டு வருவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 2019-ல் தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்தார்கள். அதில் மாணவர்கள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என இருந்தது. குழந்தைகள் தாய் மொழியில் படிக்க வேண்டும் என்றே இருந்தது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் பயில வேண்டும் என தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. தாய் மொழியில் கல்வி கற்றதால் தான் ஜப்பான், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. அதற்காகக் தான் தேசிய கல்வி கொள்கையில் பயிற்று மொழி தமிழ் என கூறுகிறோம். இதனை திமுகவினர் கூற மாட்டார்கள்.
அதே போல, 6,7,8-ல் தமிழ் மொழியில் கற்க முயற்சி மேற்கொள்ளப்படும். தேசிய கல்வி கொள்கை வரைவில் 3வது மொழி இந்தி இருக்க வேண்டும் என இருந்தது. அதனை மாற்றி ஏதாவது ஒரு இந்திய மொழி கொண்டு வாருங்கள் என பிரதமர் மோடி கூறினார். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் தேசிய கல்வி கொள்கையில் 3வது கட்டாய மொழி ஹிந்தி தான்.
ஆனால், தற்போது மும்மொழி கொள்கை பற்றி பேசுபவர்கள் யார்? சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், ரவுடிகள், கள்ளச்சாராயம் விற்றவர்கள், இவங்க எல்லாம் சேர்ந்து சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? தேசிய கல்வி கொள்கை பற்றி கர்மவீரர் காமராஜர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், எம்ஜிஆர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், பிரதமர் மோடி சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த கூட்டுக் களவாணிகள் எல்லாம் சேர்ந்து சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.