Annamalai : அண்ணா பற்றி கூறியது சரிதான்.. மன்னிப்பு கேட்க மாட்டேன்.! அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பற்றிய நிகழ்வு ஒன்றை கூறினார். அதாவது, 1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தமிழ் சங்க பொதுக்கூட்டத்தில் அண்ணா பகுத்தறிவு கருத்துக்களை பேசியதாகவும், அதற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோபப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அண்ணா பேசியது பக்தர்கள் மனதை புண்படுத்திவிட்டது. வேண்டுமென்றால் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுபோன்று பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடக்கும் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியதாகவும், உடனே அறிஞர் அண்ணா , பசும்பொன்னாரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த செய்தி தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக இதற்கு கடும் கண்டங்களை பதிவு செய்தது. மேலும் முன்னதாகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அண்ணாமலை விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை . தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். எங்கள் தலைவர்களை இனி அண்ணாமலை விமர்சித்தால் கடுமையான பதில் விமர்சனங்கள் வரும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் கூறியதில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை என தெரிவித்தார். மேலும், நான் பேசிய கருத்தை முத்துராமலிங்க தேவர் பற்றி புத்தகங்கள் எழுதிய ஆசிரியர்களே ஒத்துக்கொள்கிறார்கள். 1998இல் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாதியே ரயில்வே நிகழ்வில் 1956 நிகழ்வு குறித்து பேசியுள்ளார். நான் பேசியது சரிதான். அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. நான் அண்ணாவை தரக்குறைவாக பேசவில்லை. அண்ணா தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்துள்ளார்.
மதுக்கடையை நடத்தி தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் அது தேவையில்லை என கூறியவர். அதன் மூலம் வரும் கோடிக்கணக்கான வருவாயை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் தாய்மார்களின் கண்ணீரை பார்க்கிறேன் என அதிகாரிகளிடம் கடிந்துகொண்டவர் அறிஞர் அண்ணா என பாஜக மாநிலா தலைவர் அண்ணாமலை கூறினார். அண்ணா – பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இடையே நடந்தவை பற்றி நான் கூறியதில் இருந்து பின் வாங்க மாட்டேன் எனவும் அண்ணாமலை உறுதியாக கூறினார்.