“ஒரு ரவுடிய அடிச்சா தான், அவன் பெரிய ரவுடி..” விஜய் குறித்து அண்ணாமலை கிண்டல்!
விஜய் பிரதமரை நேரடியாக விமர்சித்து பேசியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், அரசியலில் சக்தி வாய்ந்த நபரை தாக்கி பேசினால் தான் மீடியா வெளிச்சம் கிடைக்கும் என பேசுகிறார் என்று கூறியுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் , ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ் மோகன் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் பேசிய தவெக தலைவர் விஜய், மாநிலத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிலும், இதுவரை பெயர்களை குறிப்பிடாமல் பேசி வந்த விஜய், இந்த முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மோடி என அவர்களின் பெயர்களை நேரடியாகவே கூறி தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
பிரதமர் மோடி பற்றி பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல்னு நீங்க சொல்லும்போதே உங்கள் திட்டம் புரிந்துவிட்டது, தமிழ்நாடு நிறைய பேருக்கு தண்ணி காட்டி இருக்கு எனக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வாங்குறீங்க ஆனால், நிதி தர மறுக்கிறீங்க. மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்கிறீங்க என விமர்சித்தார் விஜய்.
இப்படியாக விஜய் விமர்சித்தது குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலை பொறுத்தவரை ஒரு ரவுடியை அடித்தால் அவர் பெரிய ரவுடி ஆக முடியும்.”எனக் கூறினார்.
அப்போது நிருபர், யார் ரவுடி என கேட்கவே, ” இல்லை இல்லை அது படத்தின் டயலாக். நான் 10 பேரை அடிச்சி டான் ஆனவனு சொல்லுவாங்கல்ல அதுமாதிரி., அரசியலில் சக்தி வாய்ந்த ஒரு நபரை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு மீடியா வெளிச்சம் கிடைக்கும். கொஞ்சம் மைலேஜ் கிடைக்கும். இதே விஜய், ராகுல் காந்தி பற்றி பேச முடியுமா? பிரதமர் மேல அவதூறு கூறினால் தான் மீடியா வெளிச்சம் கிடைக்கும்.
இந்த அவதூறுகளை விடுத்து, விஜய் கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேட்கிறாரா? கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் எனக் கூறுகிறேன். ” என அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.