தொகுதி மறுசீரமைப்பு பற்றி அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை! திருமாவளவன் பதிலடி!
தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தான் செய்யமுடியும் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மற்றோரு பக்கம் பாஜக ஆதரவு தெரிவித்தும் வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி மறுசீரமைப்பு குறித்து சில விஷயங்களை பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு அரசியல் சூழ்ச்சியாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புரிதல் கூட இல்லாமல் அப்படி ஆக்குகிறார்கள். தமிழக அரசு இதைப் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது முழுக்க முழுக்க நாடகம் தான் எனவும் தொகுதி மறுசீரமைப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, இது மக்களாட்சியின் ஒரு பகுதியாகவும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பது இயல்பான நடைமுறை எனவும் பேசியிருந்தார்.
இதனையடுத்து, அண்ணாமலை பேசியது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் அண்ணாமலை தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் இது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த திருமாவளவன் ” அவருக்கு தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எந்த விதமான அடிப்படை புரிதலும் இல்லை. இந்த தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அவருக்கு புரிதல் இருந்திருந்து என்றால் நிச்சயமாக இந்த மாதிரி ஒரு கருத்தினை அவர் சொல்லியிருக்கமாட்டார். 50 வருடங்களுக்கு பிறகு இப்போது மறுவரையறு சூழல் எழுந்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தான் இதனை செய்யமுடியும் மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் தென்னிந்தியாவில் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அரசியல் வல்லுநர்கள் பலரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மட்டும் பேசிவரவில்லை அணைத்து கட்சி சார்பாகவும் பேசக்கூடிய ஒன்று. இந்த கருத்து என்ன என்பது அண்ணாமலைக்கு புரியவில்லை” எனவும் திருமாவளவன் பதில் அளித்துவிட்டு சென்றார்.