அண்ணாமலை தான் காரணம்..! எஸ்.பி.வேலுமணி கடும் தாக்கு!
எஸ்.பி.வேலுமணி: நடந்து முடிந்த இந்த மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுக 3-வது இடத்தில் வகித்து தோல்வியையும் தழுவியது. தற்போது, அதிமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசிய போது,”அரசியல் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான், ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டார். வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்து அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு 2 ஆம் கட்ட அதிமுக தலைவர்கள் தான் அதிகமாக பேசினார்கள் என்று கூறுவது சரியல்ல.
இதற்கு முன் பாஜக கூட்டணி இருந்த போது தமிழிசை மற்றும் எல்.முருகன் போன்றவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. அண்ணாமலை வந்த பிறகு தான் அண்ணா, ஜெயலலிதா, ஆகியோர் குறித்தும் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசி இருக்கிறார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான். அதே கூட்டணி இந்த தேர்தலில் தொடர்ந்திருந்தால் 30 முதல் 35 சீட்கள் வரையாவது கிடைத்திருக்கும்” என்று அவர் காட்டமாக பேசி இருந்தார்.