போராட்ட தேதியை அறிவித்தால் வசதியாக இருக்கும்… அண்ணாமலை டிவீட்.!
சென்னை: காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அவர்களின் ஊழல் வீடியோ வெளியிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவீட் செய்துள்ளார்.
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசா ஜெகநாதர் ஆலையத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என கூறினார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர்.
பிரதமர் மோடி பேசியது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு வந்தால் தமிழ் இலக்கியம் பற்றி பேசுவார். அதன் பின்னர் தான் பிரதமர் என்பதை மறந்து அநாகரிகமாக பேசுகிறார். இனியும் தமிழர் பற்றி தவறாக அவர் பேசினார் தமிழகத்தில் பாஜக இருக்க வாய்ப்பேயில்லை. ஒரு வாரத்தில் தமிழ் மக்களிடம் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்காவிடில் பாஜக அலுவலகத்தை பாஜக முற்றுகையிடும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலாக இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை, அதில், தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.
மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கு எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.