பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!
நயினார் நாகேந்திரன் பின்னால் ஒருமனதாக நின்று 2026 இல் புதிய ஆட்சி அமைப்போம் என அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது.அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் பேசப்பட்டாலும், பாஜக தேசிய தலைமை தலைவரை ஒருமித்தமாக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பப்பட்டதால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று முன்கூட்டியே தகவல்கள் பரவி வந்த நிலையில், அதனை உறுதி செய்து அவர் நாளை பதவியேற்பார் எனவும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று, சென்னையில் அவர் பதவியேற்பதற்கான விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாமலை மத்திய சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிச் சான்றிதழை கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான கிஷன் ரெட்டி வழங்கினார். இதன் பிறகு, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்து மேடையில் பேசினார்.
மேடையில் பேசிய அண்ணாமலை ” 1 ஒரே தலைவர் இருக்க வேண்டும் என்பதால் 48 லட்சம் தொண்டர்கள் சார்பாக நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்தார். எனவே, புதிய தலைவர், 2026 தேர்தல் வெற்றிக்காக கட்சியை வழிநடத்துவார். நிச்சயமாக தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற நயினார் நாகேந்திரன் முன்னோடியாக இருப்பார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்சியை அவர் வழிநடத்துவார். தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான்” எனவும் உறுதியாக அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அண்ணாமலை ” தமிழகத்தில் கட்சியை வளர்த்த அனைவரையும் இந்த நாளில் நினைத்து பார்க்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன் என்பதை தான் உச்சகட்ட பொறுப்பு என்று சொல்வேன்” எனவும் அண்ணாமலை பேசினார்.