அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!
பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த விவகாரத்திற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க ஆரம்பித்துவிட்டது. முன்னதாக அதிமுக தலைவர்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினர். அப்போதே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் என பேசப்பட்டது.
அதிமுக – பாஜக கூட்டணிக்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , அப்பதவியில் இருந்து மாற்றப்படுகிறார் என்றும், அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை தேர்வு செய்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
இப்படியான பரபரப்பான அரசியல் களத்தில், இன்று தமிழகம் வருகிறார் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா. 2 நாள் பயணமாக தமிழகம் வரும் அவர் தமிழ்நாட்டில் 2026 தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நாளை அவர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் முக்கிய அரசியல் பிரபலமாக உள்ள குருமூர்த்தி அதிமுக மற்றும் பாஜகவுக்கு நெருக்கமான நபராக பார்க்கப்படுகிறார்.
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா சந்திக்கும் முன்னர், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை புரிந்து இருந்தார். ஆடிட்டர் குருமூர்த்தி – அண்ணாமலை சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் அமித்ஷா வருகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ” தமிழ்நாடு பாஜக தலைவர் நியமனத்திற்கும் அமித் ஷா சென்னை வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதுகுறித்து ஆலோசனை நடத்த அமித் ஷா சென்னை வருகிறார்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.