வெள்ள மீட்புப்பணிகள்.! மத்திய குழு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது… அண்ணாமலை கடும் விமர்சனம்.!
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு செய்து தமிழக அரசு வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை நல்ல முறையில் மேற்கொண்டதாக குறிப்பிட்டனர். இதனை அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவன பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
சென்னை வெள்ள நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை கொடுக்க வேண்டம். ஏற்கனவே மத்திய அரசு 450 , 450 என மொத்தம் 900 கோடி ரூபாயை உடனடி நிவாரண தொகையாக கொடுத்துள்ளது. மாநில அரசு 300 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இதில் மாநில அரசு 25 சதவீத பங்கும், மத்திய அரசு 75 சதவீத பங்கும் கொண்டுள்ளது.
அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்…! அதற்கு உதாரணம் இவர்தான்..! – பிரேமலதா
2 நாள் பாதிக்கப்பட்டு இருந்தாலே குறைந்தது 5,400 ரூபாய் நிவாரணம் தேவைப்படும். இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பு , மருத்துவ செலவு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க கணக்கிட்டால் 10 ஆயிரம் ரூபாய் வந்துவிடும். நிவாரண தொகை கேட்கும் போது உதயநிதி ஸ்டாலின் ‘உங்க அப்பா வீட்டு காசையா கேட்டோம் ‘ என கூறுகிறார். ஏற்கனவே மத்திய அரசு உடனடி நிவாரண தொகையில் 75 சதவீதத்தை கொடுத்துள்ளது.
மத்திய அரசு குழு தமிழகத்தில் பார்வையிட்டு அரசு செயல்பாட்டை பாராட்டியது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வெள்ளம் பாதிக்காத பகுதிகளுக்கு கூட்டி சென்று பார்வையிட செய்து, அதன் பிறகு அவர்களுக்கு படவிளக்கம் காட்டியிருப்பார்கள். அவர்கள், மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் மாநில அரசு கொடுத்த பாதிப்பு விவரங்களை பார்வையிட்டு இருப்பார்கள் அதனால் அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வீட்டிற்கு சென்று நீங்க நல்லா இருக்கீங்களா என்றால் அவர்கள் நலமுடன் இல்லை என்றாலும் நல்லா இருக்கிறோம் என்று தான் கூறுவார்கள் அதுபோல தான் மத்திய குழு கூறிய கருத்துக்களும்.
திமுக அரசு மீட்பு பணிகளில் மொத்தமாக செயல் இழந்துவிட்டது. மத்திய அரசு அதிகாரிகள். மாநில அதிகாரிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மழை பாதிப்பு பகுதிகளை தமிழக அரசு கையாண்ட விதம் மோசம். மத்திய அரசிடம் மாநில அரசு பணம் கேட்டுள்ளனர். அந்த பணம் வரும். சேதங்கள் பட்டியல் போகும். சேதங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். அதற்கேற்றாற் போல மத்திய அரசு நிவாரண உதவிகளை கொடுக்க தான் போகிறது. ஆனால் மத்தியகுழு கூறியதை குறிப்பிட்டு தாங்கள் வேலை செய்ததாக முதல்வர் கூறிக்கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. எந்த மாநிலத்திலும் அதிகாரிகள் கொடுத்த சான்றிதழை எந்த முதல்வரும் இப்படி பாராட்டாக கருதி வெளியில் கூறியதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.