அண்ணாமலை vs தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு? இந்தியாவின் கடன் எவ்வளவு? 

தமிழ்நாட்டின் கடன் குறித்து அண்ணாமலையும், இந்தியாவின் கடன் குறித்து அமைச்சர் தங்கள் தென்னரசுவும் தங்கள் விமர்சனங்களை மாறி மாறி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Minister Thangam thennarasu - BJP State President Annamalai

சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இடையே காரசார கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் பேசிய வீடீயோவை பதிவிட்டு அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு அமைச்சர் பதில் அளித்து இருந்தார். அந்த பதிலுக்கு மீண்டும் அண்ணாமலை பதில் விமர்சனம் அளித்துள்ளார்.

முதலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு பேசினார் . அதில், அதிமுக ஆட்சியை குறிப்பிட்டு ஊழல் செய்வதற்காக தலைமை செயலகம் வந்தவர்கள், பினாமியை வைத்து ஆட்சி செய்தவர்கள், தமிழகத்தை ரூ.5 லட்சம் கோடி கடனாளியாக மாற்றியவர்கள் என விமர்சிக்கும் வீடியோ இடம்பெற்று இருந்தது.

தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி :

மேலும்,  இந்த மாதம் (மார்ச்) 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கமிஷன் அடித்தே ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் ரூ.9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ? என பதிவிட்டு இருந்தார்.

இந்தியாவின் கடன் ரூ.181.74 லட்சம் கோடி :

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்ட தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தனது எக்ஸ் தள பக்கத்தில், ” 2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.” என பதில் அளித்து இருந்தார்.

இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலம்?

இதனை குறிப்பிடு மீண்டும் அண்ணாமலை தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில்,  ” எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.

தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது. 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.

எவ்வளவு கமிஷன் வாங்குறீங்க?

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?

உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.” என பதில் விமர்சனம் செய்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்