“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!
என்ன மேட்ச். என்ன டீம்-னு தெரியாம தவெக போராட்டம் பண்றாங்க என்று தவெகவின் வக்ஃப் போராட்டம் குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்.

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்புவதோடு, மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பனையூரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டம் குறித்த அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார். இந்த நிலையில், தவெக வக்ஃப் போராட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “என்ன மேட்ச். என்ன டீம்-னு தெரியாம தவெக போராட்டம் பண்றாங்க. எதற்கு போராட்டம் செய்கிறோம் என்று தெரியாமலேயே ஒரு கட்சி தமிழ்நாட்டில் போராட்டம் செய்துகொண்டிருக்கிறது. அந்த கட்சிதான் தவெக.
வக்பு வாரிய சட்டத்திருத்தத்தில் எது தவறாக இருக்கிறது என்பதை கூற வேண்டும். தவெக உள்ளிட்ட எந்த கட்சியாகவும் இருக்கட்டும், எதற்கு போராட்டம் நடத்துகிறீர்கள் என்று சொல்லுங்கள், நல்ல விஷயமாக இருந்தால், நானும் மத்திய அரசிடம் சொல்கிறேன்” என்று விமர்சனம் செய்துள்ளார்.