பாலியல் வழக்கில் “முக்கியப்” புள்ளிகள்., சிவராமன் கொலை.? பகீர் கிளப்பும் அண்ணாமலை.!

Sivaraman - BJP State President Annamalai

சென்னை : பாலியல் வழக்கில் கைதாகி இருந்த சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த குற்றச் சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என மொத்தம் 11 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியாக கைதாகி இருந்த சிவராமன், கைது செய்யப்படுவதற்கு முன்னர் எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேல் சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவராமன் உயிரிழந்தார். முன்னதாக நேற்று இரவு சிவராமன் தந்தை அசோக்குமாரும் குடிபோதையில் நிலை தடுமாறி கிழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமார் ஆகியோரது உயிரிழப்புகள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்ட சமூக வலைதளப் பதிவில்,  ” கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் “முக்கியப்” புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்