“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்களை ‘நாகரீகமற்றவர்கள்’ என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் எனக் கூறினார்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியவுடன், சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் “நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது” என்று கூறி தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் எக்ஸ் தள பதிவினை ரீ ட்வீட் செய்து,’பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்’ எழுப்பி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ” திமுக எம்பிக்கள் எப்போதும் அரை உண்மைகளையும் அசத்தியங்களையும் பரப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள், அதை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
“அமைச்சர் உண்மையை மட்டுமே பேசியுள்ளார். திமுக உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு?
தமிழக முதல்வர் தனது முடிவுகள் மக்களின் பிரதிபலிப்பு என்று கூறுகிறார். தனியார் சிபிஎஸ்இ/மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தும் உங்கள் மகன், மகள், மருமகன் மற்றும் திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் கருத்துக்கள் மக்களின் கருத்துகளாகக் கணக்கிடப்படும் என்று நினைக்கிறீர்களா?
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, மு.க. ஸ்டாலின் இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
முதல் கேள்வி:
திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி:
மக்களின் எண்ணங்களுக்கு… https://t.co/hN32oorgqi
— K.Annamalai (@annamalai_k) March 10, 2025
ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் தர்மேந்திர பிரதான் கூறிய, நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை தான் திரும்பப் பெறுவதாக அறிவித்து மன்னிப்பும் கேட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழக எம்பிகளை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.