இன்று முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் தொடக்கம்…!
அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் இன்று முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்,அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் இன்று முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்குகிறது. மேலும், தேவைப்படும் திருக்கோயில்களில் இதே போன்று ‘தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற விளம்பரப் பதாகையை நிறுவ உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.