அண்ணா பல்கலை விவகாரம் : ” ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்”… வேல்முருகன் பேச்சு!
அண்ணா பல்கலை. சம்பவத்திற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்ட்டுள்ள ஞானசேகரன் சார் என்று தொலைபேசியில் பேசியதாக மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் யார் அவர் என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதலில், இந்த வழக்கை சென்னை காவல்துறை விசாரித்து வந்தபோது ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் விசாரணை அதுகுறித்து விரிவாக நடைபெறவேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார்கள். அப்படி தான் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சட்டப்பேரவையில் அண்ணா பல்கலை. சம்பவத்தின் கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற்றபோது ஞானசேகரன் செல்போனில் யாரிடம் பேசினார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என தெரிவித்ததோடு ஆளுநர் தான் இதற்கு பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய வேல்முருகன் ” அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஏன் வாய் திறக்கவில்லை? வேந்தர் என்ற முறையில் மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். படுபாதக செயலை செய்த ஞானசேகரன் குறித்து ஏன் ஆளுநர் வாய் திறக்கவில்லை. யார் அந்த சார் என்று ஆளுநர் கூற வேண்டும். முதலமைச்சரும், காவல்துறையும் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கவேண்டும்” எனவும் தெரிவித்தார்.
அதைப்போல, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளுநரே காரணம் என்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரன், மற்றும் மதிமுக எம்எல்ஏ, விசிக எம்எல்ஏ குற்றச்சாட்டையும் சட்டப்பேரவையில் முன்வைத்தனர்.