நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது.
நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..!
கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொதுவிடுமுறை அளிக்க கோரி தனியார் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை அணைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை நடைபெறும் தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.