அண்ணா – எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட இடுகாட்டுப்பகுதி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
மெரினாவிலுள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட பகுதியானது இடுகாட்டுப்பகுதி என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலவர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் கடற்கரை பகுதிக்குள் கடலுக்குள் பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில் அண்மையில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்மண்ட பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கூட 14 அரசு துறைகளிடம் விளக்கம் கேட்டு இருந்தது. இதில் இரண்டு துறைகள் விளக்கம் அளித்து இருந்தன. மீதம் உள்ள துறைகள் பதில் அளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், சென்னை மெரினாவில் உரிய அனுமதியுடனே தலைவர்கள் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவும், மெரினாவிலுள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட பகுதியானது இடுகாட்டுப்பகுதி எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்கள் அமைக்கப்பட்டதற்கு பின்பு தான் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை வந்தது. அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதியளித்து இருந்தது என தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.